2012 நவம்பரில் டெல்லி சென்று வந்த செய்திகளைப் பதிவு செய்த பின்னர் நான் 2013 முழுவதும் 2014 இன்று வரை முகநூலில் பதிவதோடு நின்று விட்டேன். மீண்டும் தொடர்கிறேன். கடந்த கால வாழ்க்கை பற்றி , எனக்குள் தோன்றும் கருத்து, அரசியல், அனுபவங்கள், எனத் தொடர்கிறேன்.
1977 - 2001 திராவிடர் கழகத்தில் தொடர் செயல்பாடுகள். 2001 மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தோழர்களுடன் கைது செய்யப்பட்டு மதுரையிலிருந்து சேலம் மத்திய சிறையில் 10 நாட்கள். சேலம் சிறை போதிமரம் போல பல்வேறு செய்திகளை எனக்குக் கொண்டு வந்து சேர்த்தது. நாகர் கோவிலைச் சேர்ந்த செல்லூர் செல்லப்பா! தலைமை மட்டம் வரை உள்ள சுயநலத் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஏற்கெனவே எனக்குள் இருந்த இடதுசாரிச் சார்பும், ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈரோஸ் தொடர்பில் மதுரையில் தேசிய இன விடுதலை நிலைப்பாடு கொண்ட புரட்சிகர அமைப்பாக இயங்கினோம். பல்வேறு புரட்சிகர மா-லெ இயக்கங்களின் அறிமுகங்கள். வாசிப்புகள்!
மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் - ஓவியா தங்கை, மச்சான் உறவாக எனது வாழ்வில் புதிய வசந்தம். வசந்தத்தின் இடிமுழக்கம் என நக்சல்பாரி அரசியல் அமைப்பு ஏ.பி.வி மூலம் அறிமுகமானது. அர்ப்பணிப்பு, தியாகம், வள்ளி நாயகம் மச்சானிடம் கற்றுக் கொண்டது. டி.எஸ்.எஸ். மணி மூலம் அமைப்பில் இணைந்தேன். எனது பொது வாழ்வின் அடுத்த கட்டம் தொடங்கியது. தொடர்ந்தது.
2002 ஆம் ஆண்டிலிருந்து சி.பி.ஐ(எம்-எல்) விடுதலையின் பல்வேறு அரங்குகளில், மாவட்ட, மாநில மட்டங்களில் கட்சி ஊழியனாக இயங்கிய நான், 2006 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலையின் தலைவர்களின் சதித்தனத்தால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டேன். மீண்டும் திரும்புவதில்லை என முடிவெடுத்தேன். மா-லெ நீரோட்டத்தில் அனைத்திந்திய அமைப்பில் 25 ஆண்டுகள். எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் ஒரு நீண்ட கட்டம் முடிந்தது.
மீண்டும் வேர்களைத் தேடி .... தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகச் செயல்பாடுகளாக 2007 மார்ச் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் தூக்குமேடை நாளையொட்டி மதுரையில் "மக்கள் கலை விழா ", 2007ஆகஸ்ட் - 9 அன்று "வெள்ளையனே வெளியேறு "நாளில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக முதல் மாநாடும், "மக்கள் கலை விழா "நடத்தினோம்.
2007 டிசம்பர் - 25 வெண்மணிப் படுகொலை நாளில் பின் வெண்மணி - கீழைத்தீ தோழர் பாட்டாளி எழுதிய நாவல் திருச்சியில் வெளியிட்டோம்.
2007 சி.பி.ஐ.(எம்-எல் ) விடுதலையிலிருந்து தோழர் அண்ணாதுரை, தோழர் சிதம்பரநாதன் தலைமையில் வெளியேறி வந்தனர். 2007அக்டோபர் 14 அன்று சென்னை - திருவொற்றியூரில் கூடினோம். மக்கள் விடுதலை இதழ் பிறந்தது. இ,க.க ( மா-லெ ) மக்கள் விடுதலையாகப் பரிணமித்தது. 2010 ஏப்ரல் - 22,23 சென்னை - திருவொற்றியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு முதல் மாநாடு நடத்தினோம். தமிழ்மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டேன்.
மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து வெளியேறிய தேசிய முன்னணி இதழ் - பாலன் தலைமையிலான அமைப்பினருடன் ஒன்றிணைந்து ஈழ ஆதரவுப் போராட்டங்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றிய இயக்கப் போக்கில் 2013 தொடக்கத்தில் இணைந்து ஓரமைப்பாக "கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ )மக்கள் விடுதலை, தமிழ்நாடு "அமைப்பை உருவாக்கினோம். அமைப்பின் பொதுச் செயலாளராக இயங்கினேன். 2014 சூலை 26, 27, 28 எமது கட்சியின் ஒற்றுமை மாநாடு சென்னை- திருவொற்றியூரில் நடத்தி முடித்ததோடு என்னுடைய பயணத்தில் ஒருகட்டம் முடிந்து அடுத்த கட்டம் தொடங்குவதாகக் கருதுகிறேன்.